நாட்டிலேயே முதல் பெண்மணியாக கொரோனா ஆராய்ச்சிக்காக உடல் தானம்: மேற்குவங்கத்தை சேர்ந்த 93 வயது மூதாட்டி தாராளம்

கொல்கத்தா: நாட்டிலேயே முதல் பெண்மணியாக கொரோனா ஆராய்ச்சிக்காக தனது உடலை மேற்குவங்கத்தை சேர்ந்த 93 வயது மூதாட்டி வழங்கியுள்ளார். இம்மாநிலத்தில் இதுவரை 3 பேர் தங்களது உடலை தானம் செய்துள்ளனர்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பெலியாகாட் பகுதியில் அமைந்துள்ள ஒரு  மருத்துவமனையில் கடந்த மே 14ம் தேதி 93 வயதான ஜோத்னா போஸ்  என்ற மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த  இரண்டு நாட்களில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ஜோத்ஸ்னா போஸின் பேத்தி  டாக்டர் டீஸ்டா பாசு கூறுகையில், ‘எனது பாட்டி ஜோத்னா போஸின் பிரேத  பரிசோதனை ஆர்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்தது. கொரோனா தொற்று மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மருத்துவ உலகம் ஆய்வுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவர் தனது உடலை தானம் செய்துள்ளார். கோவிட் - 19 ஆராய்ச்சி நிறுவனத்திற்காக தனது உடலை தானம் செய்த நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை எனது பாட்டி பெற்றுள்ளார். கொரோனா வைரஸ்  மனித உறுப்புகளையும், மனித அமைப்புகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

நோயியல் தன்மை குறித்து, அவரது பிரேத பரிசோதனை  முடிவுகளில் அறிந்து கொள்ள முடியும். கடந்த 1927ம் ஆண்டு சிட்டகாங்கில் பிறந்த (சிட்டகாங் தற்போது பங்களாதேஷில் உள்ளது) எனது பாட்டி, கொல்கத்தாவில் வசித்து வந்தார். தொழிலாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்’ என்றார். முன்னதாக, மேற்குவங்கத்தில் கோவிட் - 19 ஆராய்ச்சிக்காக உடலை தானம் செய்த இரண்டாவது நபர் ஜோத்ஸ்னா போஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்ட ப்ரோஜோ ராய் என்பவர் தனது உடலை முதன்முதலாக தானமாக வழங்கினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் விஸ்வஜீத் சக்ரவர்த்தி என்பவரும், கொரோனா ஆராய்ச்சிக்காக தனது உடலை தானமாக வழங்கிய மூன்றாவது நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>