×

கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!: கொரோனா நோயாளியுடன் காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது..!!

கோவை: கோவையில் கொரோனா நோயாளியுடன் காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றியுள்ளனர். 


அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ்களில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று வெடித்து சிதறி கொளுந்துவிட்டு எரிந்தது. மருத்துவமனைகளில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீ பலஅடி உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிந்ததால் அங்கு பரபரப்பு எழுந்தது. நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு  வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளியும் உயிருடன் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் பற்றி எறிந்த இடத்திற்கு அருகே கொரோனா நோயாளிகள் வார்டு இருந்த நிலையில், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், உடனடியாக அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags : Govi Government Hospital , Coimbatore Government Hospital, Corona Patient, Ambulance, Fire
× RELATED கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்து 4 பேர் அனுமதி