×

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்!: சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தகவல்..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிற்கிற்கு அந்நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போட்டி திட்டமிட்டவாறு நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொள்ளை நோய் தொற்று இன்னும் அடங்காமல் இருப்பதால் பல்வேறு நாடுகள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


குறிப்பாக போட்டி நடக்கும் டோக்கியோவிலேயே அதனை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே குரல் எழுப்பி வருகின்றனர். 3 வார காலம் நடக்கும் போட்டியால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க அபாயம் இருப்பதாக அவர்கள் காரணத்தை சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக பங்கேற்கும் நாடுகளும், அதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். 


இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளை கண்காணித்து வரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணை தலைவர் ஜான் கோட்ஸ், திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று செய்தியாளர்களிடையே பேசும் போது குறிப்பிட்டார். டோக்கியோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும் போட்டி பாதிக்கப்படாது என்று அவர் உறுதி கூறியுள்ளார்.  


கோவிட் - 19 விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும் கோட்ஸ் தெரிவித்துள்ளார். ஒலிம்பிற்காக வரும் ஒவ்வொரு குழுவுடனும் மருத்துவ குழு ஒன்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் டோக்கியோவில் இம்முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதில் ஏறக்குறைய பிரச்னை இருக்காது என்றே தெரிகிறது. 



Tags : Tokyo Olympic competition ,International Olympic Council , Tokyo Olympic Games, International Olympic Council
× RELATED 40 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு...