×

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் 2 பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆரண்யா அறக்கட்டளை சார்பில்  நவீன தொழில் நுட்பம் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2   பேருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ், அறக்கட்டளை நிர்வாகி சில்பம் கபூர் ரத்தோர், கருணை அறக்கட்டளை நிர்வாகி மகிமா போடார்  உடன் இருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்ட 10 பேருக்கு ஒரே நேரத்தில் இந்த பேருந்தில் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.  மருத்துவமனையில் ஒரு பிளாக்கில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த பேருந்து பயன்படுத்தப்படுவதாக கூறினார். இதில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா  பாதிப்பு காரணமாக வரும்  நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போல் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள  படுக்கை வசதி மற்றும் சிகிச்சை குறித்து இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:இந்து கோயில்களின் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என்ற அரசின் முடிவை டிவிட்டர் மூலம் சக்கிவாசுதேவ் போன்ற மாற்று கருத்து உடையவர்களும் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. மேலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக மாவட்டம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்தப்படும்.

மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜன் வசதி கொண்ட 172 படுக்கைகள் செயல்படுத்தப்படும்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களை உறவினர்கள் பார்க்க வருவதை தவிர்க்கும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை மூலம் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

பெரியார்நகர் அரசு மருத்துவமனை 14 கோடியில் மேம்படுத்தப்படும்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையை நேற்று அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் நகர் அரசு மருத்துவமனை 14 கோடியில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு, 75 படுக்கைகள் உள்ளன. இதனை 100ஆக உயர்த்தப்படும். 35 ஆக்சிஜன் படுக்கை வசதி முதற்கட்டமாக 50ஆக மாற்றப்படும். பின்னர், 100ஆக மேம்படுத்தப்படும். இந்த பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்படும். சென்னையில் 100 அமரர் ஊர்திகள் உள்ளன. கடந்த 4 நாட்களில் அதன் சேவை 25 சதவீதம்  உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.



Tags : Stanley Government Hospital , 2 buses with oxygen facility to Stanley Government Hospital: Minister started
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு