×

மெரினா காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய உதயநிதி ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் வாகன விபத்தில் காயமடைந்த 2 பேரை, உதயநிதி ஸ்டாலின் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் அமரர் ஊர்தி மூலம் வீட்டிற்கு மதியம் கொண்டு சென்றனர். மெரினா காமராஜர் சாலையில் அமரர் ஊர்தி செல்லும் போது, பின்னால்  திருவொற்றியூரை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி பிரேம் நாத் தனது பைக்கில் உறவினர் சுரேஷ் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். திடீரென அமரர் ஊர்தியை முந்தி செல்ல பிரேம் நாத் முயன்றார். இதில் நிலைத்தடுமாறி பைக் கீழே விழுந்தது. இதில் பைக் ஓட்டி வந்த பிரேம் நாத் மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அப்போது அவ்வழியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது காரில் வந்தார். விபத்தை நேரில் பார்த்த உதயநிதி ஸ்டாலின், தனது காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சாலையில் படுகாயங்களுடன் இருந்த 2 பேரையும் மீட்டார். பிறகு அவரே போன் செய்து ஆம்புலன்ஸ் வரவைத்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்தில் காயமடைந்த சுங்கத்துறை அதிகாரி பிரேம் நாத் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கான மருத்துவ செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், உதயநிதி ஸ்டாலின் கருணையை பார்த்து தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Udayanithi Stalin ,Marina Kamaraj , Udayanithi Stalin rescues 2 injured in Marina Kamaraj road accident and sent them to hospital: Video goes viral on social media
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...