×

கொரோனா பரவல் தடுப்பு பணி தீவிரம்: மதுரை, திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அரசு மருத்துவமனை, என்ஐடியில் சிறப்பு வார்டுகளை தொடங்கி வைத்தார்

திருச்சி: மதுரை, திருச்சியில், கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்தநிலையில், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் முதல்வரான பின் முதன் முறையாக 5 மாவட்ட சுற்றுப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் துவக்கினார். இதன்படி நேற்றுமுன்தினம் சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் மதுரை சென்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை, மதுரை மாவட்டம் தோப்பூரில் 500 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள அடிப்படை வசதிகள், மேலும் அமைக்கப்பட உள்ள ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கான பணிகள் குறித்தும் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ‘‘கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்’’ உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் திரும்ப வாசித்து உறுதி ஏற்றுக்கொண்டனர்.

இதை முடித்துக் கொண்டு அங்கிருந்து காரில் திருச்சிக்கு மதியம் புறப்பட்டு சென்றார். வழியில், மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை  மாவட்ட எல்லையான விராலிமலை லெஞ்சமேட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும்  அமைச்சர்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்,  மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், எம்.எல்.ஏ.க்கள்  புதுக்கோட்டை முத்துராஜா, அறந்தாங்கி ராமச்சந்திரன், கந்தர்வகோட்டை  சின்னதுரை ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார். இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு காரில் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 160 ஆக்சிஜன் படுக்கை உள்பட 400 படுக்கையுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 52 ஆக்சிஜன் படுக்கை உட்பட 100 படுக்கையுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள 360 படுக்கை வசதி கொண்ட கொரோனா கேர் சென்டரை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பின், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், திருச்சி சிவா, திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு  மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்னவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த 9 சட்டமன்ற தொகுதி எம்ஏல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வரிடம்  2500 கொரோனா நிதி அளித்த சிறுவன்
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தென்னூரை சேர்ந்த 12 வயது சிறுவன் சண்முகப்பிரியன், தான் சேமித்து வைத்து இருந்த ரூ.2500 ஐ கொரோனா தடுப்பு பணிக்கு வழங்கினார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

காரை நிறுத்தி மனுக்களை பெற்றார்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் உள்ள தோப்பூரில், அமைக்கப்பட்ட கொரோனாவுக்கான 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதி மையத்தை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றார். அப்போது, பொதுமக்கள் சிலர் அவரிடம் மனு கொடுத்த நின்றிருந்தனர். அதனை பார்த்த முதல்வர் காரை நிறுத்தி, அவர்களை அழைத்து மனுக்களை பெற்றார்.

கபசுர குடிநீர் அருந்திய முதல்வர்
திருச்சி என்ஐடி வளாக கோவிட் கேர் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சித்த மருத்துவ மூலிகை கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பிறகு அங்கு வைக்கப்பட்டு இருந்த கபசுரகுடிநீரை அருந்தினார். என்ஐடி மையத்தை திறந்து ைவப்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்பட்டது. பின்னர் கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொண்ட மு.க.ஸ்டாலின் மையத்தை திறந்து வைத்தார்

Tags : Chief Minister ,MK Stalin ,Madurai, Trichy ,NIT , Corona, Madurai, Trichy, Chief Minister MK Stalin, Government Hospital, NIT
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...