×

கொரோனா தொற்று சமாளிக்க தீவிர நடவடிக்கை திமுக ஆட்சி அமைந்த 14 நாட்களில் புதிதாக 16,938 படுக்கைகள் அமைப்பு: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

திருச்சி: திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சட்டமன்ற பொதுத்தேர்தலின் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று செய்தி வந்து கொண்டு இந்த நிலையில், அதிகாரிகள் என்னை வந்து சந்தித்து கொண்டு இருந்தார்கள். வாழ்த்து சொல்ல வந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து ஆலோசனை நடத்தினேன். வாழ்த்து வாங்கியதை விட தீவிரமாக பரவி வரும் கொரோனா தொடர்பாகதான் ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக தலைமை செயலாளர், மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ஆகியோரிடம் பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றேன். அந்த நேரத்தில் ரெம்டெசிவர் மருந்து பிரச்சனையை சரி செய்ய ஒரு இடத்தில் மட்டும் வழங்காமல், ஏன் பிரித்து வழங்க கூடாது என்று கேட்டு அதற்கான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டது.

இதன்பிறகு மே 4ம் தேதி பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தேன். 1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட்டேன். மே 5ம் தனியார் மருத்தவமனைகளும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தனியார் மருத்துவமனைகள் கட்டண சலுகை வழங்க வேண்டும் வேண்டுகோள் வைத்தேன். பொதுமக்கள் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு தகவல் அறிந்து கொள்ள வார் ரூம் அமைக்க உத்தரவிட்ேடன். 7ம் தேதி முதல்வராக பதவியேற்று கொண்டேன். அன்றைய தினம் மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். அதற்கு அடுத்த நாள் தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
இதைத் தொடர்ந்து மே 10ம் தேதி முதல் 24ம் தேதி ஊரடங்கு என்று மே 8ம் தேதியன்று அறிவித்தேன்.

9ம் தேதி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அமைச்சர்கள் எல்லாம் உடனடியாக நிவாரண பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக களத்தில் இறங்கி பணியாற்ற 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்களை அறிவித்து அவர்களை அனுப்பி வைத்தேன். மே 10ம் தேதி கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அளிக்கப்பட்டது.  மே 11ம் தேதி, ஊரடங்கு காரணமாக பாதிப்பை சந்தித்துள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தேன். மே 12ம் தேதி, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். சிறு, குறு நிறுவனங்களின் கடன் தொகைக்கான வட்டியை 6 மாதங்களுக்கு வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

மே13ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டி ஆக்சிஜன் இருப்பை கண்காணிக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மே 14ம் தேதி மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டது. மே 15ம் தேதி மருந்துகளை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று அறிப்பை வெளியிட்டேன். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. மே 16ம் தேதி மருத்துவமனைகளுக்கு மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. மே 19ம் தேதி தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மே 20ம் தேதி சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தேன். கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை தொடும் நேரத்தில்தான் எனது அரசு பொறுப்பேற்றுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சி அமைத்து 14 நாட்களில் புதிதாக 16,938 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 7800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் ஆகும். 30 இயற்கை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினசரி கூடுதலாக பெறப்படுகிறது. தமிழகத்தில் 375 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், வெளி மாநிலத்தில் இருந்து 100 ெமட்ரிக் டன் ஆக்சிஜனும் தினசரி பெறப்படுகிறது. புதிதாக பல நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.தினசரி 1.7 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. 2100 மருத்துவர்கள் 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி தமிழக அரசு முழுமையாக தன்னை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபத்தி கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை கொரோனா கட்டுப்படுத்துவதில் நான் உண்மையாக மகிழ்ச்சி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ெதாற்று உறுதி செய்யப்படுவர்கள் யாரும் இல்லை என்ற நாள்தான் மகிழ்ச்சியான நாள். பாசிடிவ் இல்லாமல் நெகடிவ் என்று சொல்லப்படும் நாளில் நான் முழு மகிழ்ச்சி அடைவேன். இந்த நேரத்தில் நான் மக்களிடம் கேட்பது எல்லாம் ஒன்றுதான். முகக்கவசம் அணியுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காக்க வேண்டும் என்பதுதான் என்னுடை உறுதியான வேண்டுகோள்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Church of the Principal BC ,Q. ,Stalin , 16,938 new beds set up in 14 days of DMK rule: Chief Minister MK Stalin in Trichy
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...