அரும்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் உதவி சித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு: குழந்தை பிறந்த 3 நாளில் பரிதாபம்

சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் சித்த மருத்துவர் குழந்தை பிறந்து 3 நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலைபிரியா (27). இவர் சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் உதவி சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்துள்ளது. கடந்த 9ம் தேதி சிகிச்சைக்காக வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை, குழந்தையின் எடையும் போதுமானதாக உள்ளதால்  அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.

அதன்படி கடந்தவாரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். அதன்பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக கடந்த 15ம் தேதி எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று குறையாமல் அதிகமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>