×

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் நீலோபர் கபில் 6 கோடி மோசடி:2016 தேர்தல் செலவுக்கு 80 லட்சம் வசூல்: உதவியாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார்: கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் நீலோபர் கபில் ரூ.6 கோடி மோசடி செய்துள்ளார். மேலும் 2016ம் ஆண்டு தேர்தல் செலவிற்கு ரூ.80 லட்சம் வசூல் செய்து கொடுத்ததாக அவரது உதவியாளர் டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மோசடி புகார் எதிரொலியாக நீலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம் அம்பூர்பேட்டை திப்பன்னராவ் தெருவை சேர்ந்த பிரகாசம் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  நான் கடந்த 23 வருடங்களாக அதிமுகவில் உறுப்பினராக இருந்து கட்சியின் மூலம் சமூகசேவை செய்து வந்தேன். கடந்த 2011 முதல் 2016 வரை சென்னாம் பேட்டை பகுதிக்கு நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை வாணியம்பாடி நகரமன்ற தலைவராக நீலோபர் கபில் பதவி வகித்தார்.

அப்போது என்னுடைய சமூக சேவை மற்றும் நகரமன்ற உறுப்பினராக சென்னாம்பேட்டை பகுதிக்கு செய்து வந்த சிறப்பான பணியை கருத்தில் கொண்டு என்னிடம் அடிக்கடி கட்சி சார்ந்த பணி குறித்து கலந்து ஆலோசிப்பார்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நீலோபர் கபில் அதிமுக சார்பில் வாணியம்பாடி தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தேர்தல் செலவு செய்வதற்கு போதுமான பணம் இல்லை. எனவே என்னை அணுகி ஒரு கோடி ரூபாய் பணம் தேர்தல் செலவிற்கு தேவைப்படுகிறது என்று கேட்டார். மேலும் உங்களுக்கு தெரிந்த வேறு நபர்களிடம் கடனாக வாங்கி கொடுங்கள் என்றும் கேட்டார். எனக்கு தெரிந்தவர்களிடமும் கடனாக பெற்று நீலோபர் கபில் தேர்தல் செலவிற்காக ரூ.80 லட்சம் கொடுத்தேன்.

 இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனால் அவர் என்னை அவருக்கு அரசியல் உதவியாளராக பணிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறேன். எனக்கு அரசியல் உதவியாளர் வேலை வேண்டாம் என்று மறுத்தேன். அதற்கு அவர் வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது. நீங்கள் உங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு, எனக்கு அரசியல் உதவியாளராக இருந்து அரசு தரும் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு எனக்கு உதவியாக இருங்கள் என்றார். நானும் அவருடைய பேச்சை தட்டாமல் அதற்கு ஒப்புக்கொண்டு அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அமைச்சர் நீலோபர் கபில் உத்தரவிடும் துறை சார்ந்த வேலைகளை அவர் என்ன வேலை சொல்வாரோ அதை மறுக்காமல் எனது கடமையை செய்து வந்தேன். இந்நிலையில் அமைச்சர் துறை சார்ந்த தொழிலாளர் நலத்துறையில் வேலைக்காகவும், தமிழ்நாடு வக்பு வாரியம் துறை சார்ந்த வேலைகளுக்காகவும் மற்றும் இதர துறை சார்ந்த வேலைக்காகவும் பணத்தை அமைச்சர் என்னிடம் கொடுக்க சொன்னதாக காசோலை மூலமாகவும், பண பரிவர்த்தனை மூலமாகவும் 2 பேர் என்னிடம் பணம் கொடுத்தனர்.  

என் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் நடைபெற்ற பின்பு அமைச்சர் யாருடைய வங்கி கணக்கிற்கு என்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவாரோ, அந்த வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்வேன். மேற்படி விவரங்கள் அனைத்தும் அமைச்சருக்கும், அவர்களுடைய உறவினர்கள் 4 பேருக்கும் நன்றாக தெரியும். சில நபர்கள் என்னிடம் நேரடியாகவும், காசோலை மூலமாகவும் கொடுத்த பணத்தை அமைச்சரின் உத்தரவு படியும், வேண்டுகோள் படியும், அவரிடமும் மற்றும் அவருடைய குடும்ப நபர்களிடமும், அவருடைய நெருங்கிய உறவினர்களிடமும், மற்றும் அவர் சொல்லும் நபர்களிடம் அவருடைய முன்னிலையில் கொடுத்து வந்தேன்.  இந்நிலையில் என்னிடம் பணம் கொடுத்தவர்கள் ஒன்று வேலை வாங்கி தாருங்கள் அல்லது கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுங்கள் என பலமுறை நேரில் கேட்டார்கள். அப்போது நீலோபரும் உடன் இருப்பார்.

அதற்கு நீலோபர் ஒரு வருடமாக கொேரானா தொற்று நோய் அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தால் எந்த வேலையும் வேகமாக செய்ய முடியவில்லை என்று கூறி வந்தார். துறை சார்ந்த வேலைவாய்ப்பும் இல்லை  என்றும் சொன்னார். அதற்கு பணம் கொடுத்தவர்கள் எங்களுக்கு வேலை வேண்டாம் பணத்தை வட்டியுடன் திருப்பி தாருங்கள் என்று கோபமாக பேசினர். அதற்கு அமைச்சரும் அவர்களுடைய உறவினர்களும் தேர்தல் நெருங்கி வருவதால் எனக்கு சீட்டு கிடைக்கும், மீண்டும் நான் தான் அமைச்சர் ஆவேன், அப்போது உங்களுக்கு அனைத்து வேலைகளையும் பெற்று தருகிறேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்திற்கு பிரகாசத்திடம் இருந்து வங்கி காசோலையை பெற்றுக் கொள்ளுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள் என்று சொன்னார். தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்காத காரணத்தால் பணம் கொடுத்தவர்கள் பணம் வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள்.

இதில் வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயசுதா, செல்வமணி இருவரும் ₹8 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் மற்றும் உதவியாளரான என் மீது புகார் மனுவை வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் கொடுக்க வந்தனர். இந்த விவரத்தை அமைச்சருக்கு வேண்டிய நபர்கள் மூலம் தெரிந்து கொண்ட நீலோபர் கபில், கோவை ஜபார் மூலம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த லிங்கநாதனை கோவைக்கு அழைத்து எட்டு லட்சத்தில் பாதி நான்கு லட்சத்தை கொடுத்து அனுப்பினார். அதை அமைச்சர், வெள்ளகுட்டை சார்ந்தவர்களுக்கு பணத்தை பகுதியளவு திரும்ப கொடுத்து விட்டு மீதி பணத்தை ஒரு மாதத்திற்கு பின் தருகிறேன் என்று அப்போதைக்கு சொல்லி அனுப்பி விட்டார்.  இந்நிலையில் அம்பூர்பேட்டையை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஏப்ரல் 19ம் தேதி ஆன்லைன் மூலம் அமைச்சர் மீதும் என் மீதும் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு புகார் மனு கொடுத்தார். இதை தெரிந்து கொண்ட நான் நீலோபர் கபில் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமும், நாம் அனைவரும் வாங்கிய பணத்தை கொடுத்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நாம் மக்களிடம் குறைந்தபட்சம் பணம் ஆறு கோடி தான் வாங்கியுள்ளோம்.

அந்த பணத்தில் அமைச்சரின் மகள் தனது மூத்த மகனுக்கு இங்கிலாந்தில் சொத்து வாங்கியுள்ளார். அதில் ஏதாவது ஒரு சொத்தை விற்று, ஆறு கோடி பணத்தை திருப்பி தந்து விடலாம் என்று எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் அதற்கு, அதெல்லாம் முடியாது. நானும், எனது மனைவியையும் அமைச்சர் சொல்லியதின் பேரில் தான் காசோலையெல்லாம் கொடுத்திருக்கிறோம். அவர்கள் என் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதாக என்னையும், எனது மனைவியும் மிரட்டுகிறார்கள். இதனால் உங்களுக்கும், அமைச்சருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனக்கு தான் தொல்லையும் தொந்தரவும் இருந்து வருகிறது. மன உளைச்சலாக உள்ளது. எனவே வெள்ளகுட்டையை சேர்ந்தவர்களுக்கு கொடுத்ததை போல ஆறு கோடி ரூபாய் பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பி கொடுத்து விடுங்கள் என்று வாதிட்டேன். அதற்கு அவர்கள் உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என்று கடுமையான வார்த்தைகளால் கூறினார்கள். எங்களால் பணத்தை தர முடியாது என்று சொன்னார்கள்.

இந்த நான்கு நபர்கள் கூறியதை அமைச்சரிடம் நேரில் போய் சொன்னேன். அதற்கு அவர் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் ஆறு கோடி ரூபாயை இங்கிலாந்தில் உள்ள ஒரு சொத்தை விற்று அல்லது வாணியம்பாடி மாராப்பட்டில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள சொத்தை விற்று பணத்தை செட்டில் செய்து விடலாம் என்று என்னிடம் சொல்லி, எனக்கு தைரியம் சொன்னார். நான் அதை நம்பி ஏப்ரல் 30ம் தேதி காலை 11 மணி அளவில் நாங்கள் பணம் வாங்கிய சில நபர்களை அழைத்து சென்று இவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என்று சொன்னேன்.  அதற்கு அவர் அடுத்த மாதம் மே 9ம் தேதியன்று பணத்தை கொடுத்து விடலாம் என்று திருப்பி அனுப்பி விட்டார். கோவை ஜபாரிடம் நடந்த விவரத்தை சொன்னேன். அதற்கு ஜபார் எனக்கு என்னவோ அமைச்சர் பணத்தை திரும்ப தருவார் என்ற நம்பிக்கை இல்லை என்றார். அமைச்சர் சொல்லி தான், நான் பணத்தை வாங்கி அமைச்சர் உறவினர்களிடம் கொடுத்தேன்.

எனவே அமைச்சரிடம் கொடுத்த பணத்தை வாங்கி பணம் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் 4 பேர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் வெளியானதை தொடர்ந்து, நீலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags : AIADMK ,minister ,Nilopar Kapil ,Assistant DGP , Former AIADMK minister Nilopar Kapil defrauded the government of Rs 6 crore by claiming that the government would buy him a job: Rs 80 lakh collected for election expenses in 2016: Assistant DGP complained to office
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...