‘டூல்கிட்’ விஷயத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்; ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி உட்பட 4 பேர் மீது வழக்கு: டுவிட்டர் கணக்கை முடக்க அவசர கடிதம்

புதுடெல்லி: ‘டூல்கிட்’ விஷயத்தில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே 4 தலைவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்க டுவிட்டர் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை ஏற்படுவதை மத்திய அரசு தடுக்க தவறியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு, பிரதமர் மோடியின் புகழைக் கெடுக்க காங்கிரஸ் தனியாகவே டூல்கிட்-ஐ (குறிப்பிட்ட வேலைக்கான தகவல்களை, தொடர்புகளை, வழிமுறைகள் தொகுத்து ஒரே இடத்தில் எளிமையாக அணுகும் பொருட்டு அளிப்பது) உருவாக்கி உள்ளது.

‘சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா’ போன்ற வாசகத்தை கட்சியினர் பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது’ என்றார். இந்த ‘டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் - காங்கிரஸ் தலைவர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘பொய்களைப் பரப்புவதில் நேரத்தை வீணாக்காமல் மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பஜாஜ் நகர் காவல் நிலையத்தில், மாநில காங்கிரஸ் செயலாளர் ஜஸ்வந்த் குர்ஜார், பாஜக ேதசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார்.

அதில், பாஜக தலைவர்கள், காங்கிரசுக்கு எதிராக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து, ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி, பி.எல்.சந்தோஷ், சம்பித் பத்ரா ஆகிய 4 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், காங்கிரஸ் சமூக ஊடகத் துறைத் தலைவர் ரோஹன் குப்தா வெளியிட்ட டுவிட் பதிவில், ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போலி தகவல்களை பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். இதுதொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஏற்கனவே ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: