குஜராத், மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களில் ‘டவ்தே’ புயலால் 37 கப்பல் ஊழியர்கள் உட்பட 122 பேர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

மும்பை: குஜராத், மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களில் ஏற்பட்ட ‘டவ்தே’ புயலால் 37 கப்பல் ஊழியர்கள் உட்பட 122 பேர் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலின் மும்பை கடற்பகுதியில் ஏற்பட்ட ‘டவ்தே’ புயலால் கடந்த 16ம் தேதி காலை 10.15 மணியளவில் பி-305 கப்பலின் 12 நங்கூரங்கள் விலகின. கப்பலில் இருந்த 261 ஊழியர்கள் பீதியடைந்த நிலையில், மறுநாள் (மே 17) வானிலை மேலும் மோசம் அடைந்ததால், கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. மிகவும் ஆபத்தான சூழல் ஏற்பட்டதால், உயிர் காக்கும் உடையை (ஜாக்கெட்) ஊழியர்கள் உடலில் அணிந்து கொண்டனர்.

மெதுவாக கப்பல் மூழ்க தொடங்கியதால், இரவு 7 மணியளவில் அனைவரும் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்து உயிரை காப்பாற்றி கொள்ள முயற்சித்தனர். உயிரைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி விடிய விடிய நீந்திக் கொண்டிருந்தனர். தகவலறிந்து கடலோர கடற்படை கப்பல்களின் மீட்புக் குழுவினர், நடுக்கடலில் போராடியவர்களை பல மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடனும், பிணமாகவும் மீட்டனர். பி-305 கப்பலின் ஊழியர்கள் 37 பேர் உட்பட இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை  அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மதிப்பீட்டின்படி, ‘டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத், மகாராஷ்டிரா உட்பட ஆறு மாநிலங்களில் 2.6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 2.4 லட்சம் பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் மட்டும் 47 பேர் இறந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலில் சிக்கிய பி-305 கப்பலின் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து மீட்பு படையினருக்கு எப்போது தகவல் கிடைத்தது? மீட்பு குழுவினர் முழு பலத்தையும் காட்டி எப்படி மீட்டார்கள்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இருந்தும் 37 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட விசயத்தில், கப்பற்படைக்கும், கப்பலில் சிக்கியர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே தகவல் தொடர்பில் சிக்கல்கள் இருந்ததா? வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டு இருந்த ஆப்கான்ஸ் நிறுவனம், கப்பல் விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘புயல் தொடர்பாக எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்ட கப்பல்களுக்கு 14ம் தேதி அன்றே எச்சரிக்கை விடுத்ேதாம். பி-305 கப்பல் எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள இடம், பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்டதால், அந்த இடத்தில் கப்பல் நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், 16ம் தேதி மாலையில் வானிலை அதிதீவிர மோசம் அடைந்ததால், கப்பல் மூழ்குவதை தடுக்க முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>