சீன தொழிலதிபரை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி!: ஆசியாவிலேயே 2வது இடம்.. வானை முட்டும் சொத்து மதிப்பு..!!

டெல்லி: கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு போன்றவற்றால் இந்தியா 2 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக தவித்து வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி ஆசியாவின் 2வது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக அறியப்படும் கெளதம் அதானி, கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன் வர்த்தகத்தை பன்மடங்கு விரிவாக்கம் செய்துள்ளார். இதனால் பங்கு சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. 

விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி, துறைமுக வர்த்தகம் என பல துறைகளிலும் இவரது சொத்து மதிப்பு  நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் அவரது சொத்து மதிப்பு 4 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதானி டோட்டல் கேஸ் பங்கு 1145 விழுக்காடும், அதானி எண்டர் பிரைசிஸ் பங்கு 827 விழுக்காடும், அதானி டிரான்ஸ்மிஷன் 617 விழுக்காடும் உயர்ந்துள்ளது. 

அத்துடன் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 433 விழுக்காடும், அதானி பவர் நிறுவனம் 189 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த அபார வளர்ச்சியால் சீனா பணக்காரரான ஸோங் ஷான்ஷான் - ஐ முந்தி ஆசியாவின் 2வது பெரிய பணக்காரராக அதானி உருவெடுத்துள்ளார். 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.

Related Stories:

>