×

திருப்பூரில் தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு வலுகட்டாயமாக கொரோனா பரிசோதனை

திருப்பூர்: திருப்பூரில் தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவையின்றி முன்பதிவு செய்யாமல் வெளியே சுற்றுவோருக்கு தற்போது கொரோனா பரிசோதனை கட்டாயமாக எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தெற்கு காவல் நிலையம் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் முறையாக இ-பதிவு செய்யாமல் வெளியில் சுற்றுவோரை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யும் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றியும் முறையாக இ-பதிவு செய்யாமலும் வெளியில் சுற்றுவோருக்கு வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 42,192 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,038ஆக உள்ளது. ஒவ்வொரு நாளும் 1000திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் முதல் 10 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் இடம்பெறுகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கூட பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு இந்த கொரோனா பரிசோதனையின் மீது ஒரு அச்சம் உள்ளது. இதுபோன்று கொரோனா பரிசோதனைகளை மற்ற சோதனைசாவடிகளிலும் விரிவுபடுத்தினால் பொதுமக்கள் வெளியே சுற்றுவது குறையும் என்று கருத்தும் வெளிப்படுகிறது.



Tags : Tirupur , corona
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...