பொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 80 நாளில் 5500ஐ கடந்தது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா தொற்று சுமார் 80 நாட்களில் 5500ஐ கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கிய கொரோனா 2ம் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சராசரியாக 15பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

 ஆனால், இரண்டாவது அலையில், கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து அதிகரித்தது. இரண்டாம் அலை துவங்கிய சில வாரத்தில்,  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் அதிகபட்சமாக தினமும் 20பேர் வரை தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த இரண்டு வாரமாக நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு 50ஆக அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலர்  இறந்தனர்.  கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் ஆனைமலை, வால்பாறை , கிணத்துக்கடவு ஒன்றியத்திக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதம் 19ம் தேதி வரையிலான 80 நாளில் 5500பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதுவரை 2300பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுன்றி, ஒன்றிய ஊராட்சிகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து சில நாட்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் மற்றும் சத்துமாத்திரைகள் வினியோக பணி தொடர்ந்துள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>