×

வெளுத்து வாங்கும் கன மழை ஊட்டி காந்திநகர் பகுதியில் மண் அரிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்தால் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுவது, மண் சரிவுகள் ஏற்படுவது வழக்கமானவை. இதனால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பாதிப்பது வாடிக்கை.

கடந்த ஆண்டு வழக்கம்போல், இந்த இரு பருவமழையும் நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பெய்தது. எனினும், பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் கன மழை வெளுத்து வாங்கி  வருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் ஊட்டி முதல் நுந்தளா மட்டம் வரை உள்ள சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா பகுதியிலும் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாள் தோறும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இன்று முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மரங்கள் விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தலைக்குந்தா அருகே காந்திநகர் பகுதியில் சாலையோரம் மண் அரிப்பு: மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சாலைகள் பெரும்பாலானவை  குறுகலாகவும், சரிவுகளை கொண்டதாகவும், அதிக வளைவுகளை கொண்டவையாகவும் உள்ளன.  இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வாகனங்களை இயக்க தெரியாமல்  விபத்தில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக  கிராமப்புறங்களுக்கு செல்ல கூடிய சாலைகள் குறுகலானவையாகவே உள்ளன. தற்போது  மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள், கிராம சாலைகள் விரிவாக்கம் செய்து  தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்  தொடர்ச்சியாக ஊட்டி அருகே தலைக்குந்தா பகுதியில் கல்லட்டி சாலை  சந்திப்பில் இருந்து காந்திநகர், பாரஸ்ட் கேட் வழியாக சுமார் 3 கி.மீ. தூர  சாலை உள்ளது.

கோடை சீசன் சமயங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்  வகையில் இந்த சாலை மாற்று பாதையாகவும் விளங்கி வந்தது. இந்த சாலை குறுகலாக  இருந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சாலையில் பக்கவாட்டு சுவர்கள்  இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விவசாய நிலங்களில்  மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு அண்மையில் பல  இடங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. ஆனால் கான்கிரீட் தளம்  அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த மழை காரணமாக  தடுப்புச்சுவர் அமைக்கப்பட்ட பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு  தடுப்புச்சுவர்கள் அந்தரத்தில் தொங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை தொடரும்  பட்சத்தில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே  நெடுஞ்சாலைத்துறை உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  அந்த பகுதி பொது
மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty Gandhinagar , Ooty: Heavy rains in the Nilgiris district have caused minor landslides in a few places. Great if it continues to rain heavily
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...