×

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குங்கள்!: மத்திய அரசிடம் காங். தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தல்..!!

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் வேகம் தீவிரமடைந்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 4209 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  2,91,331 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். 


இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தொற்றின் பாதிப்புகள் மிக மோசமாக காணப்படுவதை குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபரின் மறைவால் தவிக்கும் குழந்தைகள் ஆகியோர் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். 


இத்தகைய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிராமப்புற குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்த பள்ளிகளை உருவாக்கியுள்ளதாகவும் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார். 



Tags : Sonia Gandhi , Corona, Child, Free Education, Federal Government, Sonia Gandhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!