×

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்க!: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 


அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் மாநிலங்களுக்கு ஒதுக்கபடுகின்றன என தெரிவித்து அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தார். 


தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆக்சிஜன் தேவையை பொறுத்தவரை தற்போது சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும், படுக்கைகளை அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்து மனுதாரரின் கருத்துக்களை அரசிடம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். 


ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதேபோல் புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது புதுவையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலோ தமிழகத்தில் இருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன்  ஆக்சிஜன் தேவைப்படுவதால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 


அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர். 


2வது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் எனவும், முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 



Tags : Tamil Nadu ,Vuachcheri , Tamil Nadu, Pondicherry, Vaccine, Central Government, ICC
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...