×

கேரளாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக்கொண்டார் பினராயி விஜயன்: ஆளுநர் ஆரிப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடந்து முடிந்த கேரளா சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்றதும் கவர்னர் மாளிகையில் முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் தலைமை செயலகத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். 2வது முறையாக பதவியேற்பதை முன்னிட்டு இன்று காலை முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம், சிபிஐ கட்சிகளை சேர்ந்த புதிய அமைச்சர்கள் ஆலப்புழாவில் உள்ள வயலார், புன்னப்ரா கம்யூனிஸ்ட் தியாகிகள் மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தினர். பதவியேற்பு விழாவுக்கு பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் தவிர, தமிழ்நாடு, மேற்குவங்கம், டெல்லி உள்பட 13 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Binarai Vijayan ,Chief Minister of Kerala ,Governor ,Arib , Binarayi Vijayan sworn in as Kerala Chief Minister for the second time: Governor Arif sworn in
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...