×

தமிழகத்தில் சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை!: அமைச்சர் பொன்முடி பேட்டி..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு குறித்து விசாரிக்க இருக்கிறோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை நுழையாமல் இருக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 23 தனியார் கல்லூரிகள் தேர்வு கட்டணம் செலுத்தாமலேயே தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளன. மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளே அண்ணா பல்கலை.க்கு செலுத்த வேண்டும். 


திங்கட்கிழமைக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை எனில் தனியார் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் திறந்தநிலை பல்கலைக்கழக பாடப்புத்தகங்களில் திமுக மற்றும் இடதுசாரிகள் குறித்து தவறான தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் உள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான கருத்துக்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 


தொடர்ந்து பேசிய அமைச்சர், இதுவரை இல்லாத அளவாக அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தக குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.



Tags : Tamil Nadu ,Minister ,Bonhairi , Tamil Nadu, Private College, Examination Fees, Minister Ponmudi
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...