தூள் தூளாக உடையும் மநீம கட்சி!: பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார் சி.கே. குமரவேல்..தனிமனித பிம்பமே காரணம்..!!

சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே. குமரவேல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய தோல்விக்கு பிறகு மேல்மட்ட நிர்வாகிகள் பலர் தங்களுடைய பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி வரக்கூடிய சூழலில் கட்சியின் முக்கிய பொறுப்பாளரான பொதுச்செயலாளர் பதவியில் இருக்கக்கூடிய குமரவேல் விலகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்பும், ஊடகங்கள் முன்பும் முன்வைத்துவிட்டார்கள். முன் வைத்த காரணிகளில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிதாக தான் சொல்வதற்கு எதுவும் இல்லை. கட்சியில் வரலாறு படைக்க வேண்டியதாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமோ என்ற கோபமும், ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. 

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை கைவிட்டு மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். இதன் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே துணை தலைவராக இருந்த மகேந்திரன், பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு, அதேபோல் முருகானந்தம் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகிய நிலையில், குமரவேல் விலகியதையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

Related Stories:

>