×

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு 1000 கோடி நிவாரண நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு; பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம்

அகமதாபாத்: டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, புயல் நிவாரணமாக உடனடியாக ரூ.1000 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளார். அரபிக்கடலில் உருவான டவ்தே புயலால் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிதீவிர புயலாக வலுவடைந்த டவ்தே குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா மற்றும் டையு இடையே கடந்த 17ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது 175 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இப்புயலால் குஜராத்தில் 16,000 வீடுகள்  சேதமடைந்ததாகவும், 40,000 மரங்கள், 70,000 மின்கம்பங்கள் முறிந்ததாகவும், 5,961 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் மாநில அரசு கூறி உள்ளது. மேலும், புயலால் 45 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் குஜராத்தின் பாவ்நகருக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உனா, டையு, ஜப்ராபாத், மஹூவா பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அகமதாபாத்தில் அதிகாரிகளுடன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து குஜராத்துக்கு புயல் நிவாரண நிதியாக உடனடியாக ரூ.1000 கோடி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

மகாராஷ்டிரா வராதது ஏன்?
குஜராத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்த பிரதமர் மோடி, மகாராஷ்டிராவில் பார்வையிட ஏன் வரவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்து. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் தனது டிவிட்டரில், ‘‘குஜராத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, ஏன் மகாராஷ்டிராவுக்கு வரவில்லை. இது அப்பட்டமான பாரபட்சமில்லையா?’’ என கூறி உள்ளார். குஜராத்தில் பலவீனமான பாஜ ஆட்சி நடப்பதால் மோடி அங்கு சென்றிருப்பதாகவும், மகாராஷ்டிராவில் திறன்மிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடப்பதால் இங்கு வரவில்லை என்று சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராத் விமர்சித்துள்ளார்.

நடுக்கடலில் மூழ்கிய படகு 22 சடலம் மீட்பு; 65 பேர் மாயம்
புயலின் போது, மும்பையில் அரபிக்கடலில் எண்ணெய் கிணறிலும், நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த 3 படகுகளிலும் 707 ஊழியர்கள் தங்கியிருந்தனர். இவர்களை போர்க்கப்பல்கள் மூலம் கடற்படை வீரர்கள் மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடக்கிறது. இதில் ஒரு படகு எண்ணெய் கிணற்றில் மோதியதில் கடலில் மூழ்கியது. பலர் கடலில் பல மணி நேரம் தத்தளித்தனர். 273 பேர் கப்பலில் இருந்த நிலையில் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 22 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 65 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.  மற்ற கப்பல் மற்றும் எண்ணெய் கிணறு பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Tags : Gujarat ,DW storm ,PM Modi , 1000 crore relief fund for Gujarat affected by Dowry storm: PM Modi 2 lakh to the family of the victim
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...