தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மூச்சுத்திணறல்: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென  மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை மேற்கொண்டு பின்னர் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து தமிழகம் திரும்பினார். மேலும், பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது அவருடைய குடும்பத்தினருக்கும் அவருக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றனர். இதன்பின், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த கட்சி தலைவர்களும் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து பேச முன்வரவில்லை. இதனால், தொண்டர்கள் கவலையடைந்தனர். இந்த சூழலில், பிரசாரம் செய்வதற்காக விஜயகாந்த் வருவார் என கூறப்பட்டது. அதன்படி, இறுதி நாட்களில் திருச்சி உட்பட சில பகுதிகளில் பிரசாரத்திற்காக சென்ற அவர் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எதுவும் பேசாமல் கையசைத்து மட்டும் காரில் இருந்தபடியே வாக்கு சேகரித்தார். அதன்பிறகு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்ததும் ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே, பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர் உடல்நலம் பெற வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர், நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு உடல் நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>