×

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி:  ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6.34 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட், அனுமதி வழங்கியது. அதன்பேரில் கடந்த 12ம் தேதி இரவு ஆக்சிஜன் உற்பத்தி முழுமையாக தொடங்கியது. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் (13ம் ேததி) இயந்திரம் பழுதானதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு இஸ்ரோ அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து பழுதை நீக்க உதவினர். அவர்களது ஆலோசனையின் பேரில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. நேற்று மாலை வரை சுமார் 17 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் 6.34 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனில் 6 டன் கன்னியாகுமரிக்கும், 5 டன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்படும்.


Tags : Oxygen production again at the Sterlite plant
× RELATED யானை தாக்கி விவசாயி பலி