×

குமரி எல்லையோர சாலைகள் மண்கொட்டி அடைப்பு: கேரள போலீசார் நடவடிக்கை

களியக்காவிளை: குமரி- கேரள எல்லையோர சாலைகள் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளன.  தமிழகம் மற்றும் கேரளாவில் கடும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக டிரிபிள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரள பகுதிக்குள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக கேரள போலீசார் குமரி மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மண் கொட்டி அடைத்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களை கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். கண்ணுமாமூடு ஜங்ஷனில் இருந்து மணிவிளை செல்லும் சாலையில் கேரள போலீசார் மண்கொட்டி உள்ளனர். இதனால் மணிவிளை மற்றும் சுற்றியுள்ள தமிழக கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புலியூர்சாலை பகுதியில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளதால் மாங்கோடு, ஐந்துளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

பனச்சமூடு சந்திப்பில் இருந்து குளப்பாறை என்னும் தமிழக கிராமத்திற்கு செல்லும் சாலையை அடைத்துவிட்டதால் குளப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குமரி-கேரள எல்லைப்பகுதியான ஆறுகாணி முதல் கொல்லங்கோடு வரை 30 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் 30க்கும் மேற்பட்ட இணைப்பு ரோடுகள் உள்ளன. தமிழக கிராமங்களில் இருந்து விவசாயம், வியாபாரம், மருத்துவம் சார்ந்த அடிப்படை தேவைகளுக்காக மக்கள் கேரளாவிற்கும், கேரள மக்கள் தமிழக பகுதிகளுக்கும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழக கிராமங்களில் இருந்து கேரளா செல்லும் சிறிய சாலைகளை கூட மண் கொட்டி அடைத்திருப்பதால் பல கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் இருந்து வெளியே வர முடியாததால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அடிப்படை தேவைகளுக்காக கூட இவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Kumari border ,Kerala , Kumari border roads blocked by mud: Kerala police action
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...