2021 இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி சாத்தியமா?!: மத்திய அரசின் இலக்கு மீது சந்தேகம் எழுப்பும் உற்பத்தியாளர்கள்..!!

டெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பது சாத்தியமாகுமா என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவன அதிகாரிகளே கேள்வி எழுப்பியுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிக்கு சுமார் 200 கோடி தடுப்பூசி தேவைப்படும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தியாகும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு வியப்பை ஏற்படுத்துவதாக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரேசீராக மூலப்பொருட்கள் கிடைத்து தொய்வின்றி உற்பத்தி நடைபெற்றால் கூட இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 கோடி தடுப்பூசி மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தால் ஜூலை மாதத்திற்கு பிறகு மாதம் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு நடைபெற்றால் கூட 50 கோடி தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும். 

இதேபோல் தற்போது மாதம் கோவாக்சின் 1 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம், ஆகஸ்ட் மாதம் முதல் 7 கோடி தடுப்பூசிகளையும் செப்டம்பர் மாதம் முதல் 10 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவுள்ளது. இதன் மூலம் 47 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த 2 தடுப்பூசிகள் மொத்த உற்பத்தி மத்திய அரசின் எதிர்பார்ப்பில் பாதி அளவு கூட இல்லாததால் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories:

>