×

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ரஷ்யாவுக்கு தடுப்பூசி சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி சுற்றுலாவில் ரஷ்யாவுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியை சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று இந்த தடுப்பூசி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. மொத்தம் 24 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவின் போது பயணிகளுக்கு 2 தவணை ஸ்புட்னிக் - வி தடுப்பூசி செலுத்தப்படும். சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்றதும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும். அதன் பிறகு ரஷ்யாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். 

பயணத்தின் போது 21 நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 நாட்களை கொண்ட ரஷ்ய தடுப்பூசி சுற்றுலா பயணத்திற்கு, சுற்றுலா  பயணிகளிடம் இருந்து தலா 1.3 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களை பீட்டர்ஸ்பர்கிலும், எஞ்சிய நாட்களை மாஸ்கோவில் செலவிடும் வகையிலும் சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இருந்து 30 பேர் அடங்கிய முதல் தடுப்பூசி சுற்றுலா குழு கடந்த 15ம் தேதி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளது. 

2வது குழு வருகின்ற 29ம் தேதி ரஷ்யா புறப்படவிருக்கிறது. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 24 நாட்களில் ரஷ்யாவை சுற்றி பார்ப்பதுடன் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள முடியும் என்பதால் ரஷ்ய தடுப்பூசி சுற்றுலா பயணம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய பயணிகள் நுழைய, பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில், இந்தியர்கள் தடுப்பூசி சுற்றுலாவில் ரஷ்யா வர அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



Tags : India ,Russia , India, Corona, Russia, Vaccine Tourism
× RELATED ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த...