×

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்றால் பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், விதிமீறி வீடுகளை விட்டு வெளியே சுற்றித் திரிந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் 15  மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டலத்திற்கு 2 எண்ணிக்கையில் மண்டல அமலாக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவர்களிடமிருந்து அபராத தொகையினையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடிசீல் வைத்தும், அதன் உரிமையாளர்களிடமிருந்து அபராத  தொகையினையும் வசூலித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,  மருந்துகள் போன்ற அடிப்படை தேவைகளை  பூர்த்தி செய்ய சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக இத்தகைய ஏற்பாடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சென்னை  மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு  சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இத்தகைய செயலினால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.  இதனை மீறி வீடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்க பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ.2000 அபராதமாக வசூலிக்கவும், 2வது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில்  வருவது கண்டறியப்பட்டால் அவர்களை சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் எண் அறிவிப்பு

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் விதிமீறி வீடுகளை விட்டு வெளியே வந்தால், அதுபற்றிய விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர்  044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம். எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்,  என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Corporation Commissioner , Corporals fined Rs 2,000 for loitering outside homes: Corporation Commissioner warns
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...