×

அந்த நாள்... அந்த தருணம் மறக்கவே முடியாது: சச்சின் நெகிழ்ச்சி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளார். சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் அசைக்கமுடியாத சக்தியாக சச்சின் இருந்தார். அவர் படைக்காத சாதனையே இல்லை என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். 1996 உலகக் கோப்பையில் தனி ஒரு ஆளாக இந்திய அணியை அவர் கொண்டு சென்றார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி செல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். அதுமட்டுமின்றி 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதையும் பெற்று அசத்தினார்.
2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கிய சச்சின் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து கலக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சாதனைகளின் நாயகனாக விளங்கிய சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத நாள் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:- 1983ஆம் ஆண்டு கபில்தேவ் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கையிலேந்தியதைப் பார்த்ததும் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்போது எனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினேன். அப்போது நான் இதேபோன்று ஒரு நாள் உலகக் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நினைத்தேன். அது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்ததை என்னால் மறக்கவே முடியாது. எனது கிரிக்கெட் கேரியரில் மிகச் சிறந்த நாளாக நான் கருதுவது 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கையில் ஏந்திய அந்த நாள்தான் அந்த தருணம்தான். அந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. நம் நாட்டிற்கே கிடைத்த வெற்றியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது’’ என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

Tags : Sachin , That day ... that moment will never be forgotten: Sachin's resilience
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!