‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு

ரோம்: ‘‘உண்மையில் அவர் மிகச் சிறந்த வீரர். அவருடைய சூப்பர் ரசிகை நான்’’ என்று ரோஜர் பெடரரை, செரீனா வில்லியம்ஸ் பாராட்டியுள்ளார். ரோம் அருகே உள்ள பார்மா நகரில் நடந்து வரும் எமிலியா-ரோமாக்னா ஓபன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ரோஜர் பெடரர் என்ற இரண்டு வார்த்தைகள் போதுமே. அவரது பெருமையை சொல்ல... உண்மையில் அவர் மிகச் சிறந்த வீரர். ஆட்டத்தின் போக்கை தனது தரமான அணுகுமுறையால் மாற்றக் கூடியவர். இப்போது வரும் இளம் வீரர்கள் அவரைப் போல் ஆடுகிறார்கள். அவரைப் போல் நடக்கிறார்கள். அவரது டெக்னிக்கை கடைபிடிக்கிறார்கள். அவர் ஒரு ஜீனியஸ்.

அவருடைய சூப்பர் ரசிகை நான். அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அற்புதமான விளையாட்டு திறமை அவருடையது. அவரைப் போல் நானும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஜெனிவா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் பங்கேற்க உள்ளார். ஸ்விட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமாக இன்றும் வலம் வரும் பெடரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, சாதனை படைத்துள்ளார். 310 வாரங்கள் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார். தற்போது தரவரிசையில் 8ம் இடத்தில் உள்ளார். செரீனா வில்லியம்சும் மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 319 வாரங்கள் முதலிடத்தில் நீடித்துள்ளார். தற்போது தரவரிசையில் அவரும் 8ம் இடத்தில் உள்ளார்.

Related Stories: