கடந்த 2 வாரங்களாக திருப்பதியில் தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் : ரூ.27 லட்சம் உண்டியல் வசூல்

திருமலை: இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட், நன்கொடையாளர்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தர்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர். 

அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது. தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கொரோனா விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.  கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனத்தில் வந்த நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 5,081 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 4,587 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.27 லட்சம் உண்டியல் வசூலானது.

Related Stories: