×

இத்தாலி ஓபன் டென்னிஸ் 10வது முறையாக நடால் சாம்பியன்: ஸ்வியாடெக் அசத்தல்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் 19 வயது போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டார். இத்தாலி ஓபன்  ஆண்கள் ஒற்றையர் பைனலில்  உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), 3ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர். இத்தாலி ஓபனில்  5 முறை பட்டம் வென்றவரும் நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச், 9 முறை சாம்பியனான நடால் இருவரும் இதுவரை இத்தொடரின் இறுதி போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் நடால் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், சமீபத்திய தொடர்களில் அடைந்த தோல்விகள் காரணமாக உலக தர வரிசையில் 2வது இடத்தில் இருந்த நடால் 3வது இடத்துக்கு பின்தங்கினார்.

அதனால் ரோம் மாஸ்டர்ஸ் பைனலில் ஜோகோவிச் எளிதில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இழுபறியாக அமைந்த முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில்  நடாலின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜோகோவிச் தடுமாற, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட  நடால் 6-3 என்ற கணக்கில் தனதாக்கினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 49 நிமிடங்களுக்கு நீடித்தது. 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்ற நடால், இத்தாலி ஓபனில் 10வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

இகா ஆதிக்கம்: மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  போலந்து வீராங்கனை  இகா ஸ்வியாடெக் (9வது ரேங்க், 19 வயது), செக் குடியரசு வீராங்கனை கராலினா பிளிஸ்கோவா (10வது ரேங்க், 29 வயது) ஆகியோர் மோதினர். ஸ்வியாடெக் ஆரம்பம் முதலே ஒரு தவறு கூட செய்யாமல் அசத்தலாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். கரோலினாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த அவர் 6-0, 6-0 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக இத்தாலி ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 46 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு பிரெஞ்சு ஒபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இகா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. களிமண் தரை மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் தனித்திறமையை வெளிப்படுத்தி வரும் இகா, இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும் கோப்பையை தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

*  நடால் - ஜோகோவிச் இருவரும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜோகோவிச் 29-28 என முன்னிலை வகிக்கிறார்.
* ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் நடால், ஜோகோவிச் தலா 36 சாம்பியன் பட்டங்களுடன் சமநிலை வகிக்கின்றனர். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 28 ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Tags : Nadal ,Italian Open Tennis ,Sviatech , Nadal Champion for the 10th time at the Italian Open Tennis: Sviatech stunned
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்