கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் பிறந்தநாள் அன்று 4,000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணையான 2000 தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10ம் தேதி 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜா கார்டன் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் நியாய விலை கடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை ₹2000 நிவாரண தொகையை வழங்கினார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 6வது மண்டல அலுவலகத்தில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். மேலும், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்திகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது, இந்து, சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நலம் விசாரித்த முதல்வர் மனம் நெகிழ்ந்த முதியோர்

கொளத்தூர் அலுவலக ஆய்வுக்கு பிறகு, அப்பகுதியில இருந்த வீட்டுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், வாசலில் நின்ற முதிய தம்பதியினரிடம், கொரோனா  காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய தம்பதியினர், வழக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வருவார். இன்று எங்கள் வீட்டுக்கு வந்து எங்களிடம் நலம் விசாரித்ததும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் மகிழ்ச்சி  அளிக்கிறது என்றனர்.

Related Stories:

>