×

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்; 10வது முறையாக பட்டம் வென்று நடால் சாதனை: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 10வது முறையாக வென்று, ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த பைனலில் அவர், ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச்சை வீழ்த்தினார். நேற்று ரோம் நகரில் நடந்த இத்தாலியன் ஓபன் டென்னிஸ் பைனலில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், 2ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் மோதினர். இதில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். 2வது செட்டில் நடாலின் கேம்களை அடுத்தடுத்து ஜோகோவிச் பிரேக் செய்தார். இதன் மூலம் அந்த செட்டை 6-1 என ஜோகோவிச் அதிரடியாக கைப்பற்றினார்.

3வது செட்டின் துவக்கத்திலும் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் 2 பிரேக் பாயின்ட்டுகளை அவர் வீணடித்தார். தனது சர்வீஸ்களை முதலில் சிரமப்பட்டு தக்க வைத்துக் கொண்ட நடால், அதன் பின்னர் எழுச்சியுடன் ஆடத் துவங்கினார். சரியான நேரத்தில் ஜோகோவிச்சின் கேமை பிரேக் செய்த அவர், 3வது செட்டை 6-4 என வசப்படுத்தினார். இதன் மூலம் 7-5, 1-6, 6-4 என 3 செட்களில் வெற்றி பெற்று, இத்தாலியன் ஓபன் 2021 ஆடவர் ஒற்றையர் கோப்பையை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இத்தாலியன் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை நடால், 10வது முறையாக கைப்பற்றி, புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜோகோவிச்சும், நடாலும் இதுவரை 57 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவற்றில் ஜோகோவிச் 29 போட்டிகளிலும், நடால் 28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு பின்னர் நடால் கூறுகையில், ‘‘இந்த வாரம் எனக்கு சிறப்பான வாரம். முதல் சுற்றில் இருந்தே எனது ஆட்டம், எனக்கு திருப்திகரமாக இருந்தது. தவிர இம்மாத இறுதியில் துவங்க உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்க இந்த வெற்றி உதவும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Italian Open tennis ,Nadal ,Djokovic , Italian Open tennis; Nadal wins title for 10th time: Djokovic defeated in final
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!