கும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கிய 4 இறைச்சி கடைக்கு சீல்-அதிகாரிகள் அதிரடி

கும்பகோணம் : கும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கி வந்த 4 இறைச்சி கடைக்கு போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டும் தமிழக அரசு விலக்கு அளித்து விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்ததோடு இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில், கும்பகோணம் நகராட்சி சுகாதார அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுவினர் கும்பகோணம் நால்ரோடு, செம்போடை, நாகேஸ்வரன் தெற்கு வீதி, ஆகிய இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் மாடு, ஆடு, கோழி, உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதில் ஈடுபட்ட நபர்களை சுற்றிவளைத்தனர்.

மேலும் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories:

More