×

நீலகிரியில் 2536 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது ஊட்டி - கூடலூர் சாலையில் விழுந்த மரம் அகற்றம்

ஊட்டி : அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 2536 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அரபிகடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 14ம் தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கூடலூரில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழையால் கூடலூரில் உள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட கூடும் என்பதால் தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபுவின் நேரடி கட்டுபாட்டில் உள்ள மெரினா பீச் சிறப்பு ஸ்கூபா டைவிங் மீட்பு குழுவினரும் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

இதனிடையே கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பாதுகாப்பு கருதி தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேரங்கோடு ஊராட்சி பகுதியில் கட்டி முடித்து சில வாரங்களே ஆன தடுப்புசுவர், இன்டர்லாக் சாலை இடிந்து சேதமடைந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பந்தலூரில் 180 மி.மீ., தேவாலா 145 மி.மீ., அப்பர்பவானி மற்றும் சேரங்கோட்டில் தலா 106 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து நேற்று காலை முதல் மழை சற்று குறைந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனிடையே மழை காரணமாக நேற்று மாலை 3 மணியளவில் ஊட்டி - கூடலூர் சாைலயில் 8வது மைல் அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது.

 நேற்று முழு ஊரடங்கு என்பதால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பிரேம்குமார் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு மரத்தை வெட்டி அகற்றினர். இதனிடையே டவ்-தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 2536 மி.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (நேற்று காலை 8 மணி நிலவரப்படி) மில்லி மீட்டரில்:

 ஊட்டி 20.8, நடுவட்டம் 91, குந்தா 23, அவலாஞ்சி 54, எமரால்டு 25, கெத்தை 44, கிண்ணக்கொரை 24, அப்பர்பவானி 106, பாலகொலா 22, குன்னூர் 17, கோத்தகிரி 13, கூடலூர் 68, தேவாலா 145, செருமுள்ளி 68, பாடந்தொரை 67, பந்தலூர் 180, சேரங்கோடு 106 என மொத்தம் 1298 மி.மீ. பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

Tags : Nilgiris ,Ooty-Cuddalore road , Ooty: Widespread rains have lashed the Nilgiris district due to the Dove-Te storm that formed in the Arabian Sea. 2536 mm, rainfall in last 3 days
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...