×

கொள்ளிடம் அருகே 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடிகால் மதகு இடித்து அகற்றம்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடிகால் மதகு இடித்து அகற்றப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் கொள்ளிடம் பகுதியில் மட்டும் பாசன வசதி பெற்று வருகின்றன.

அணைக்கரை என்ற இடத்தில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் தெற்கு ராஜன் வாய்க்கால் இறுதியில் கொள்ளிடம் வழியாக சென்று கொள்ளிடம் அருகே உள்ள பில் படுகை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் முக்கிய இடங்களில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த கதவணைகள், சிறு மதகுகள் மற்றும் தண்ணீர் வெளியேறி செல்லும் சுரங்கப்பாதை வழிகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டு புதிய மதகுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் அழிஞ்சி ஆற்றை கடந்து வரும் வகையில் அதன் குறுக்கே கடந்த 1904ம் ஆண்டு வடிகால் மதகு மற்றும் பாலம் கட்டப்பட்டு இருந்தது. அந்த மதகு வலிமை வாய்ந்ததாக இருந்து வந்ததால் அதனை அதிகாரிகள் இடித்து அகற்ற வேண்டாம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் விவசாயிகள் அதனை இடித்து அகற்றிவிட்டு புதியதாக பாலம் மற்றும் மதகு கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பாலத்தை இடிக்க முடிவு செய்து, 115 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த மதகை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த பழமையான பாலம் மற்றும் மதகு விவசாயிகள் கோரிக்கைய ஏற்று இடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய பாலம் மற்றும் மதகு கட்டும் பணி துவங்கி விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றனர்.

Tags : Kollidam , Kollidam: 115 year old drain near Kollidam was demolished. Mayiladuthurai District Kollidam
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி