ரோம் மாஸ்டர்ஸ் பைனலில் நடால்-ஜோகோவிச் பலப்பரீட்சை

ரோம்: பிரபல டென்னிஸ் தொடரான இத்தாலியன் ஓபன் ரோம் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மோதுகிறார். அரை இறுதியில் இத்தாலி வீரர் லாரென்சோ சோனிகோவுடன் (33வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் 6-3, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கோவுடன் (47வது ரேங்க்) மோதிய நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை  தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் முன்னணி வீரர்கள் நடால் - ஜோகோவிச் மோதுகின்றனர். இருவரும் இதுவரை 56 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் ஜோகோவிச் 29-27 என முன்னிலை வகிக்கிறார். ரோம் மாஸ்டர்ஸ் தொடரில் இவர்கள் 9வது முறையாக மோத உள்ளனர்.

இதுவரை மோதிய 8 போட்டியில் நடால் 5 முறை வென்றுள்ளார். ரோம் மாஸ்டர்ஸ் தொடரில் நடால் 9 முறையும், ஜோகோவிச் 5 முறையும் பட்டம் வென்றுள்ளனர். இருவரும் இறுதிப் போட்டியில் 5 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளதில்  நடால் 3-2 என முன்னிலை வகிக்கிறார்.தற்போது 6வது முறையாக இவர்கள் பைனலில் களம் காண்பது டென்னிஸ் ரசிகர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கரோலினா ஸ்வியாடெக் மோதல்

இத்தாலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் (29 வயது), போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (19 வயது) மோதுகிறார்.

அரை இறுதியில் கரோலினா 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சையும், ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ காஃபையும் வீழ்த்தினர்.

Related Stories:

More