ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் தொடர்பு: மதுரையில் 4 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை: லேப்டாப் உட்பட 16 வகை ஆவணங்கள் பறிமுதல்

மதுரை:  மதுரையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை  பறிமுதல் செய்தனர்.

மதுரை, காஜிமார் தெருவை சேர்ந்தவர் முகம்மது இக்பால் என்ற செந்தில்குமார் (29). இவர், `தூங்காவிழிகள் இரண்டு’ என்ற பேஸ்புக் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். இந்தப்பதிவுகளில் உள்ள கருத்துக்கள், ஐஎஸ்ஐஎஸ் மற்றும்   ஹிஜாபுல் தாஹிர் ஆகிய அமைப்பிற்கு ஆதரவாகவும், மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி, கடந்த 2020, டிச.2ம் தேதி வழக்கு பதிந்து, முகம்மது இக்பாலை  கைது செய்தனர். இந்த வழக்கு, கடந்த ஏப்.14ம் தேதி, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

  இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முகம்மது இக்பால் அளித்த தகவலின் அடிப்படையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மதுரை காஜிமார் தெரு, மகபூப்பாளையம்,  கே.புதூர், பெத்தானியாபுரம் ஆகிய 4 பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் நேற்று   தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இச்சோதனையில், அலுவலகங்கள் மற்றும் சிலரின் வீடுகளிலிருந்து லேப்டாப், ஹார்ட்  டிஸ்க், செல்போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள்,  தடை செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட 16 வகையான   ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களின் அடிப்படையில், காவலில்  உள்ள முகம்மது இக்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். இந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>