திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கு சென்றாலும் தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு கட்டாயம்; மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரத்தால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. அந்தவகையில், கடந்த 10ம் தேதி முதல் இரண்டு வாரம் முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதேபோல், அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்த  தளர்வுகளை பயன்படுத்தி சிலர் ஊரடங்கு விதிகளை மீறுவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்து கடந்த 14ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 15ம்  தேதி காலை 4 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.

அந்தவகையில், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை, பலசரக்கு, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கும் நேரம் காலை 6 முதல் 10 மணியாக குறைக்கப்பட்டது. அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு,  மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த இ-பதிவு முறையானது 17ம் தேதி முதல்  நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்தநிலையில், இ-பதிவு முறை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை //eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், இ-பதிவு  செய்துகொண்டதற்கான ஆதாரத்தை உடன் வைத்துக்கொண்டு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்யலாம்.

Related Stories:

>