டவ்-தே புயல் காரணமாக கனமழை; தமிழகத்தில் 13 அணைகளின் நீர் மட்டம் உயர்வு: நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்...பொறியாளர்களுக்கு அரசு அறிவுரை

சென்னை: டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 13 அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே, அணைகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பொறியாளர்களுக்கு அரசு அறிவுரை  வழங்கி உள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயலையொட்டி தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக, தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் 13 அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 93.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 61.8 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. 2146 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.  32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 20.6 டிஎம்சியாக உள்ள  நிலையில் வினாடிக்கு 3599 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 2.4 டிஎம்சியாக உள்ள நிலையில், 1104 கன அடி நீரும், 10.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில்  4.6 டிஎம்சியாக உள்ள நிலையில், 2478 கன அடி நீர் வருகிறது.

6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 4.1 டிஎம்சியாக உள்ள நிலையில், 930 கன அடிநீர் வருகிறது. 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 3.2 டிம்சியாக உள்ள நிலையில் 2629 கன அடியும், 5.5 டிஎம்சியாக  உள்ள மணி முத்தாறு அணையில் 2.6 டிஎம்சியாக உள்ள நிலையில் 734 கன அடியும், 4.3 டிஎம்சி கொள்ளவு கொண்ட பேச்சிபாறை அணையில் 2.6 டிஎம்சி உள்ள நிலையில் 2485 கன அடி நீரும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி  அணையில் 1.4 டிஎம்சி உள்ள நிலையில் 2212 கன அடி நீரும், 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 0.04 டிஎம்சி உள்ள நிலையில் 800 கன அடி நீரும்,

13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 4.3  டிஎம்சி உள்ள நிலையில் 4368 கன அடி நீரும், 3.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 2.1 டிஎம்சி உள்ள நிலையில் 471 கன அடியும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 1 டிஎம்சி உள்ள நிலையில் 728  கன அடி நீரும் வருகிறது. 1.6 டிஎம்சி கொள்ளளவு ெகாண்ட கிருஷ்ணகிரி அணையில் 0.51 டிஎம்சியும், 7.3 டிஎம்சி கொள்ளளவு ெகாண்ட சாத்தனூர் அணையில் 1.9 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இதில், பேச்சிப்பாறை அணையில் 4417 கன அடி நீரும், சோலையாறு அணையில் 650 கன அடி நீரும், பரம்பிகுளத்தில் 500 கன அடி நீரும், திருமூர்த்தி அணையில் 1184 கன அடியும், மணிமுத்தாறு அணையில் 325 கன அடியும், பாபநாசம்  அணையில் 255 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி  தெரிவித்தார்.

இந்நிலையில், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தங்கு தடையின்றி செல்கிறதா என்பதை ஆய்வு செய்யவும், அணைகளில் இருந்து திடீரென கால்வாய்களில் அதிகபட்ச நீர் வெளியேற்றுவதை தவிர்க்கவும், இந்த அணைகளுக்கு வரும்  நீர்வரத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கிடவும், அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கேற்ப செயற்பொறியாளர்கள் தண்ணீர் திறந்து விடவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: