வேகமெடுக்கும் தொற்று பரவல்!: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி இன்றி நோயாளிகள் பலரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகளும் அங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கைகளும் உள்ளன. மயிலாடுதுறையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு வழங்க நிர்வாகம் முன்வந்தது. அதன்படி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவரிடம் ஒப்படைத்தார். தருமபுர ஆதீனம் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மடாதிபதி தெரிவித்தார். முன்னதாக ஆதீன மடத்தின் சார்பில் தினசரி 2000 பேருக்கு கபசூர குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>