×

குஜராத் போன்ற மாநிலங்களில் மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: குஜராத் போன்ற சில மாநிலங்களில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாகவும், இது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமெனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் சக்திசின் கோஹில் ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: குஜராத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் வரை 1 லட்சத்து 23 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 58,000 இறப்பு சான்றிதழ்கள் தரப்பட்டுள்ளன. இத்தகவலை நாங்கள் அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் இருந்து முழுமையாக ஆய்வு செய்து திரட்டியுள்ளோம்.இதே காலகட்டத்தில் 4,218 பேர் கொரோனாவில் இறந்துள்ளதாக குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. முந்தைய ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் உள்ள இறப்பு எண்ணிக்கை 65,805 ஆகும். இதில் 4,218 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறி உள்ளனர். எனவே இதை ஆண்டின் வழக்கமான இறப்பு உயர்வு என்றோ, வேறு காரணங்கள் என்றோ கூறி விட முடியாது.

இந்த விஷயத்தில் குஜராத் அரசு வேண்டுமென்றே கொரோனா மரணங்களை மறைத்திருப்பதாக நாங்கள் வலுவாக சந்தேகம் கொள்கிறோம். எங்கள் சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாக, கங்கையில் பல சடலங்கள் மிதந்துள்ளன. 2000 அடையாளம் காணப்படாத சடலங்கள் கங்கைக் கரையில் புதைக்கப்பட்டுள்ளன. இதுபோல வேறு சில மாநிலங்களும் கொரோனா மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் நாட்டுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விஷயம் உண்மையாக இருந்ததால், அது வெட்கக் கேடனாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Gujarat ,Congress ,federal , Hidden corona deaths in states like Gujarat: Congress urges federal government to explain
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...