×

கொரோனா கட்டளை மையத்தில் நள்ளிரவு 11 மணிக்கு திடீர் ஆய்வு: உதவி கேட்ட பெண்ணிடம் போனில் பேசி நெகிழ வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: `முதல்வன்’ பட பாணியில் நடந்த சம்பவம் என பொதுமக்கள் வியப்பு

சென்னை: தமிழகத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த படம் `முதல்வன்’. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக நடித்திருக்கும் காட்சி தமிழக மக்கள் அனைவரின் நெஞ்சிலும் இடம் பிடித்தது. அந்த படத்தில், முதல்வராக நடித்த அர்ஜுன் மக்கள் குறைகளை, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நேரடியாக களத்தில் சென்று சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார். அதேபோன்று, மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்காத அதிகாரிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்வார். இதுபோன்ற காட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், இப்படி ஒரு நிஜ முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே 5 கோப்புகளில் கையெழுத்து போட்டு பொதுமக்களின் கவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார்.

அதில் முக்கியமான அறிவிப்புதான், முதல் தவணையாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம், பெண்களுக்கு அரசு மாநகர பஸ்சில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு உள்ளிட்டவை ஆகும். தமிழகத்தை மிக சிறந்த மாநிலமாகவும், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கிட வேண்டும் என கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது முட்டுக்கட்டையாக இருப்பது கொரோனா தொற்று பரவல். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான், கொரோனா காலத்தின் நெருக்கடியை சமாளிப்பதற்காக சென்னை  டிஎம்எஸ் அலுவலகத்தில் `கொரோனா பெருந்தொற்று கட்டளை மையம்’ என்னும் ஒரு புதிய பிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். இந்த பிரிவு, பொதுமக்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அதாவது, கொரோனா நோயாளிகள் தங்களுக்கு படுக்கை வசதி, மருந்து வசதி, ஆக்சிஜன் தேவை உள்ளிட்டவைகளை 104 என்ற இலவச எண்ணுக்கு தெரிவித்தால் உடனடியாக அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

இதற்காக ஒரு பெரிய குழுவினர், 24 மணி நேரமும் டிம்எஸ் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்த கட்டளை மையம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (14ம் தேதி) இரவு 11 மணிக்கு அந்த கொரானா நெருக்கடி அவசரகால உதவி மையத்திற்கு நேரடியாக சென்றார். அப்போது கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தரேஸ் அகமது, நோடல் அலுவலர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வினித், டாக்டர் எஸ்.உமா ஆகியோர் அங்கு இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்தபோது, பொதுமக்களிடம் இருந்து வந்த சில தொலைபேசி அழைப்புகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து பேசினார்.  அப்போது சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அந்த பெண்ணுக்கு என்ன உதவி வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அப்போது அந்த பெண் பதற்றமாக பேசினார். அப்போது, முதல்வர், பதற்றம் இல்லாமல் பொறுமையாக பேசும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு அந்த பெண் கேட்ட உதவிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார். ஒரு முதல்வர், பொதுமக்களுடன் இத்தனை எளிதாக பேசக்கூடிய நிலை தமிழகத்திற்கு முற்றிலும் புதிதாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அர்ச்சனா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தை நான் இரவு 11 மணிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, உடல்நலமில்லாத என்னுடைய உறவினருக்கு  படுக்கை வசதி செய்து தரும்படி உதவி கோரினேன். மறுமுனையில் பேசியவர், `நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு `என்ன வகையான பெட் வேண்டும்?’ எனக்கேட்டார்.  `ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பெட் வேண்டும்’ என கூறினேன். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.  அப்போது  அவர், `உங்களுக்கு வேறு என்ன விதமான உதவி தேவை?’ என்றும் கேட்டறிந்தார்.

அவர் பேசும்போது என்னிடம், `ஸ்டாலின்’ என்று தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இன்னொரு முறை கேட்டபோதும் அவர் தன்னுடைய பெயரை கூறினார். நான் பேசிவிட்டு போனை வைத்து விட்டேன். எனக்கு திடீரென சந்தேகம் வந்துவிட, மீண்டும் போன் செய்து, `என்னுடன் பேசியவர் யார்?’ என்று கேட்டேன். அப்போது, `தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் உங்களுடன் பேசினார்’ என்று கூறினார்கள். அப்படி அவர் கூறியதும் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை,  இந்த இரவு நேரத்திலும் (இரவு 11 மணி)  விழித்திருந்து அவர் மக்கள் பணியாற்றுவது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. திடீரென கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை திக்குமுக்காடிப் போனேன். நெருக்கடி மிகுந்த இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண மக்களும் தொடர்பு கொள்ளக்கூடிய எளிய முதலமைச்சராக அவர் இருப்பது எனக்கு பெரிய ஆறுதலை அளித்தது. இப்படிப்பட்ட முதல்வரைத்தான் நாங்கள் இத்தனை நாளாக தேடிக் கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறினார்.

Tags : Corona Command Center ,Chief Minister ,MK Stalin , udden inspection at Corona Command Center at 11 am: Chief Minister MK Stalin talking on the phone to a woman asking for help: The public is surprised that the incident took place in the style of a 'first man'
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...