×

சாலைபோட டெண்டர் கொடுத்துவிட்டு மண் எடுக்க லஞ்சமாக கோடிகளை கான்ட்ராக்டர்களிடம் வாங்கி குவித்த அதிமுக அமைச்சர்கள்

* மத்திய அமைச்சர் எச்சரித்த பின்னரும் திருந்தாத அதிகார வர்க்கம்
* அதிமுக ஆட்சியில் கான்ட்ராக்டர்கள் கசக்கி பிழியப்பட்டதாக குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில், மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவு, வருவாய், போக்குவரத்து போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் மாநிலம் முழுவதும் சாலைகள் அமைக்கத்தான் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்தனர். குறிப்பாக சேலம், கோவையில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தேவையில்லாத இடங்களிலும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், சாலைகள் அமைக்க கான்ட்ராக்ட் எடுத்தால் தமிழக அரசுக்கு அல்லது அதிகாரவர்க்கத்துக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டும். இதைத் தவிர அதிகாரிகளுக்கும் தனியாக கொடுக்க வேண்டும். அதைத் தவிர சாலைகள் போடும்போது இடையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நிரப்ப மண்ணை எடுத்து கொட்ட வேண்டும். இதற்காக சாலை போடப்படும் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரியிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அவ்வாறு மாவட்ட அதிகாரியிடம் எந்த விண்ணப்பம் கொடுத்தாலும், அமைச்சரின் அண்ணனை பாருங்கள் என்று உத்தரவு வரும். இதற்காக அமைச்சரின் அண்ணனை பார்க்க வேண்டும். அவர் ஒரு லோடு மணலுக்கான பணத்தை லஞ்சமாக கேட்பார். வழக்கமாக ரோடு போட அரசுதான் இலவசமாக மண் தரவேண்டும். அதற்கு அனுமதியை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி உடனடியாக வழங்குவார். கடந்த திமுக ஆட்சியின்போது அப்படித்தான் நடைமுறை இருந்தது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில்தான் இந்த முறை மாற்றப்பட்டது. எதற்கெடுத்தாலும், என்ன கேட்டாலும் பணம் ெகாடுக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. இதனால் ஏதோ தனியாரிடம் மணல் வாங்குவதுபோல அமைச்சருக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. அரசு மண்ணுக்கு, அமைச்சருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதோடு 3 மாதத்துக்குத்தான் கனிம வளத்துறை அனுமதி வழங்கும். அதன்பின்னர் மீண்டும் அனுமதி கேட்க வேண்டும்.

அமைச்சரின் அண்ணனை பார்க்க வேண்டும். லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலைதான் உருவானது. இதனால் தேவையில்லாமல் சாலை போட காலதாமதம் ஆனது. செலவும் அதிகமானது. தேவையில்லாமல் கான்ட்ராக்டர்கள் மனவேதனையும், பண நெருக்கடிக்கும் உள்ளானார்கள். இது குறித்து அதிமுக அரசுக்கும், நெடுஞ்சாலை அமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுதிய கடிதம் வருமாறு: தேசிய நெடுஞசாலை ஆணையம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது தங்களுக்கு தெரியும். 1300 கிலோ மீட்டர் தூரமுள்ள 24 சாலை திட்டங்கள், 199 கிலோ மீட்டர் தூரமுள்ள 5 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள 13 திட்டங்கள் மார்ச் 2021க்குள் வழங்கப்படவுள்ளது. மேலும் 574 கிலோ மீட்டர் தூரமுள்ள 6 திட்டங்கள் 2021-2022ம் ஆண்டில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 161 கிலோ மீட்டர் தூரத்திற்கான 4 புதிய சாலை திட்டங்கள் நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் முழு ஒத்துழைப்பால் இந்த திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகங்களிடம் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால்தான் பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி தருவதற்கு 3 மாதங்கள் ஆவதால் ஒப்பந்ததாரர்கள் இந்த குறுகிய காலத்திற்குள் ஒப்பந்தங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட சாலை திட்டங்ளுக்கான மாவட்ட நிர்வாகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ள நிலையிலும் இதுவரை இந்த அனுமதி பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்துவிடும். அதனால், மாவட்ட நிர்வாகங்கள் தரும் அனுமதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு இந்த திட்டங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த ஒப்பந்த காலத்திற்குமான பணிகள் தாமதமாகாது. சீக்கிரம் அனுமதி கிடைத்தால் இந்த திட்டங்கள் மூலம் தமிழகம் முழுவதும் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரே, அதிமுக அரசின் ஊழல் குறித்து தெரிந்து கொண்டு, கடிதம் அனுப்பியும் அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்ததாகவும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கான்ட்ராக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags : AIADMK , AIADMK ministers who bribed contractors to buy land after giving tenders for roads
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...