×

மூன்று நாட்களுக்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சிவகாசி:  தமிழகத்தில் 3 நாட்களுக்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்குமென தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவையை சரி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் அந்தப் பழுது சரி செய்யப்பட்டவுடன் நமக்கு ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் நெதர்லாந்து நாட்டில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு வர தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார்.

மேலும் 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நமக்கு வர உள்ளது. காலி சிலிண்டர்களை அனுப்பி வைத்து அதில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டு வந்து  தேவைப்படுபவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஆக்சிஜன் சேமித்து வைக்க சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக சிலிண்டர்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்த உள்ளோம். அதிகபட்சமாக இன்னும் 3 நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் முழுமையாக சீராகும். அதற்குள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியும் தொடங்கிவிடும்.  கடந்த காலங்களில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு தற்போது செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகளை கண்டறிந்து, அங்கு உரிய ஆய்வு நடத்தி ஆக்சிஜன் தயாரிக்க வாய்ப்பு இருந்தால் அங்கேயும் பணி தொடங்கப்படும். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Gold South , Oxygen shortage will be completely eliminated within three days: Minister Gold South
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...