×

கொரோனா சிகிச்சையை தீவிரப்படுத்தும் வகையில் ஸ்டான்லி பொதுமருத்துவ பிரிவு பாரதி மகளிர் கல்லூரிக்கு மாற்றம்

சென்னை: கொரோனா சிகிச்சையை தீவிரப்படுத்தும் வகையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் பொது மருத்துவ பிரிவு பாரதி மகளிர் கல்லூரிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இங்கு செயல்பட்டு வந்த பொது மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகளுக்கு இதயம், எலும்பு முறிவு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், கண் பரிசோதனை, நரம்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை என என அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. எனவே, பொது மருத்துவ சிகிச்சைக்காக பொதுமக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  செல்வதை தவிர்த்து, பாரதி மகளிர் கல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்று  கொள்ளலாம், என மருத்துவமனை நிர்வாக அதிகாரி ரமேஷ் கூறினார்.

Tags : Stanley General Medicine Division ,Bharathi Women's College , Stanley General Medicine Division transferred to Bharathi Women's College to intensify corona treatment
× RELATED துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி...