‘பேஸ்புக்’ நட்பை நம்பி ஏமாந்த இளம்பெண் 28 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம்: அரியானா மாநிலத்தில் அட்டூழியம்

ஹசன்பூர்: அரியானாவில் பேஸ்புக் நட்பை நம்பி கிராமத்திற்கு சென்ற பெண்ணை 28 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஊர் எல்லையில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் ஹசன்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள ராம்கரில் வசிக்கும் சாகர் என்பவர், பேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவரிடம் நட்பு கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணை தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவதாக கூறி, அவரை தனது கிராமத்திற்கு சாகர் அழைத்தார். அதன்படி, அந்த பெண்ணும் கிராமத்திற்கு சென்றார். அப்போது, சாகர் உட்பட 22 பேர் ஒரே நேரத்தில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்த நாள், மேலும் ஆறு நண்பர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்விவகாரம் வெளியே தெரியவரவே, போலீசார் 28 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரச்னா கூறுகையில், ‘சாகரின் அழைத்ததின் பேரில், கடந்த 3ம் தேதி ஹோடல் என்ற கிராமத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் சென்றார். அப்போது, அந்த பெண்ணை சாகர் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரது சகோதரர் சமுதார் மற்றும் 20 இளைஞர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் அந்த பெண்ணை அன்றிரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்தநாள் காலையில், அந்த பெண்ணை கிராமத்திற்கு அருகிலுள்ள தனது நண்பர் ஆகாஷ் கபரியின் வீட்டிற்கு சாகர் அழைத்துச் சென்றார். அங்கு, அவரது ஆறு நண்பர்கள் அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின்னர், சாகரும் அவரது மற்ற 3 நண்பர்களும் அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பதர்பூர் எல்லையில் விட்டுவிட்டு சென்றனர். 28 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண், தன்னுடைய வீட்டை அடைந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தார். அவரது பெற்றோர் விசாரித்ததில், முழு சம்பவத்தையும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து பெற்றோர் ஹசன்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், குற்றம்சாட்டப்பட்ட சாகர், சமுத்ரா, ஆகாஷ் உள்ளிட்ட 28 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: