மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை நீராவி மையம் துவக்கம்

மன்னார்குடி: கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் மூலிகை நீராவி சிகிச்சை அளிப்பதற்கான அமைக்கப்பட்ட மையத்தை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். கொரோனா தொற்று 2வது அலையின் பரவல் திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகளவில் பரவி வருகிறது. தமிழக அரசின் உத்தரவுபடி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து மூலிகை நீராவி சிகிச்சை வழங்குகிறது.

தினசரி மாலை வேளைகளில் 2 மணி நேரம் கொரோ னா நோயாளிகளுக்கு மட்டும் இந்த சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்படும். நொச்சி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை, வேம்பு உள்ளிட்ட மூலிகைகள் தினசரி ஒவ்வொன்றாக நீராவி மூலம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இந்த மைய திறப்பு நிகழ்வு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்து மூலிகை நீராவி மையத்தை துவக்கி வைத்தார். மூலிகை நீராவி மையம் குறித்து டாக்டர் விஜயகுமார் கூறுகையில், சூடான தண்ணீரில் சில மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக் கூடிய கிருமிகள் வெளியேறிவிடும்.

இது மூச்சு குழாய் அடைப்பை சரி செய்து விடும். நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீர லில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும். ஆவி பிடித்துக்கொண்டிருக்கும்போது வியர்வை அதிகளவில் வெளியேறும். ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை, வேர்வையை துடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும்போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஆனால், ஆவி பிடிக்கும்போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். ஒருவர் ஆவி பிடித்த துணியில், தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது. இதனால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றார். நிகழ்ச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், சித்தா பிரிவு மருத்துவர் ரூபதர்ஷினி, ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>