×

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவி: 2 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மற்றும் செல்வாக்கான பதவியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சென்னையிலேயே நல்ல பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 போலீஸ் அதிகாரிகளுக்கு நேற்று புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி திரிபாதி பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சிபிசிஐடி டிஜிபியாக இருந்தவர் பிரதீப் பிலிப். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர் மாற்றப்பட்டார். தற்போது அவர் ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குநராக இருந்தவர் ஜெயந்த் முரளி. லஞ்ச ஒழிப்புத்துறையில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு அவர், மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது, ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இவருக்கு கீழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். இவரது அலுவலகம் சென்னையில் உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் மகேஷ்குமார் அகர்வால். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது, குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடிக்கு இணையான பதவி என்று கூறப்படும் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். கொரோனா தாக்குதலால் விடுமுறையில் இருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல ஐஜியாக இருந்தவர் ஜெயராம். தேர்தல் நேரத்தில் பணக்கடத்தலில் அதிமுகவினரை கண்டு கொள்ளாமல் இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து திமுக அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் இவரை மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது. தற்போது, அவர் சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக இருந்தவர் தினகரன். இவர் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேர்தல் ஆணையத்தில் திமுக அளித்த புகாரின்பேரில் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தற்போது அவர் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்தவர் லோகநாதன். இவர், திருச்சியில் திமுக மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்ப வேண்டும் என்பதற்காக போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்தவர். இதனால் தேர்தல் ஆணையம் இவரை மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. தற்போது அவர், ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு உளவுப் பிரிவு டிஐஜியாக இருந்த ராஜேந்திரன், தொழில் நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

கோவையில் எஸ்பியாக இருந்த மூர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியபோது, கோவையில் குடிமாரமத்து திட்டத்தை பார்வையிடச் சென்றவரை கைது செய்தார். ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர். மாலையில் விடுவித்தனர். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக மாற்றப்பட்டார். பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது அவர் சேலம், போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த செந்தில், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பயிற்சி பள்ளியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். கரூர் எஸ்பியாக இருந்த மகேஷ்வரன், அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் மீது தேர்தல் நேரத்தில் வழக்குப்பதிவு செய்தவர். தேர்தல் ஆணையம் அவரை மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது. தற்போது அவர், மதுரை மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை எஸ்பியாக இருந்தவர் அருள்அரசு, இவர், அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், தேர்தல் ஆணையம் இவரை திமுக புகாரின் பேரில் மாற்றி, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.

தற்போது அவர் டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல உளவுத்துறை எஸ்பியாக இருந்து மாற்றப்பட்ட சரவணன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ராஜா, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுரேஷ்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத் தடுப்பு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதில், காத்திருப்ேபார் பட்டியலில் இருந்த 13 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் அதிமுக ஆட்சியின்போது செல்வாக்காகவும், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் இருந்தவர்கள். இவர்களில் பலர், வெளியூர்களுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், திமுக அரசு பதவி ஏற்ற பிறகு யாரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையிலேயே நல்ல பதவியிலேயே தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் பணியாற்றிய நேர்மையான அதிகாரிகள் மண்டபம் முகாமுக்கும், நாகர்கோவில், கும்பகோணம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து கழகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது, அப்படி செய்யாமல், சென்னையிலேயே பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு டிஜிபி அலுவலகத்திலேயே பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : New post for 13 police officers on waiting list: 2 police officers transferred
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...