×

சென்னையில் தேவையில்லாமல் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை: முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு; வாகனம் பறிமுதல்

சென்னை: சென்னையில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 10 ம்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 24ம் தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட்டும் காலை அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையில் தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது, வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது. பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இடத்தில் மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அதையும் மீறி வாகனங்களில் தேவையில்லாமல் வருபவர்களின் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. எனவே, தேவையின்றி பலர் வாகனங்களில் வெளியில் சுற்ற தொடங்கினர். கடந்த 3 நாட்களாக இதுபோன்று மக்கள் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து ஊரடங்கை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அரசின் அறிவுரைகளை பொதுமக்களில் சிலர் ஒழுங்காக பின்பற்றாததால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுமாறும் போலீசார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சென்னையில் போலீசார் நேற்று காலை முதலே வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அதன்படி பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் சுமார் 200 இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு, அண்ணாசாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற்பகல் 12 மணிக்கு மேல் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னையில் கடற்கரை பகுதியில் டிரோன் கேமரா மூலமும் போலீசார் கண்காணித்தனர். காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகளை சரியாக 12 மணிக்கு மூடி விட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதனை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதேபோன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags : Chennai , Action against those who unnecessarily violated the curfew in Chennai: Case against those who did not wear a mask; Vehicle confiscation
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...